Thursday, October 6, 2011

கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை

இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 

இக் கையடக்கத் தொலைபேசி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டமைக்கு 2 முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். 






சுமார் 1 வருடத்திற்கும் அதிகமான இடைவெளியின் பின்னர் வெளியாகும் ஐ போன் அதன் கையடக்கத்தொலைபேசியென்பதுடன், ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகிய பின்னர் டிம் குக் அப்பதவியை ஏற்றவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியென்பதுமாகும். 


எனினும் இவ் எதிர்பார்ப்புகள் இரண்டும் வெற்றியளித்ததா என்பது சற்று சந்தேகத்துக்குரிய கேள்வியாக மாறியுள்ளது. 

ஆம், பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகிய ஐ போன் 4 எஸ்அப்பிளின் ஐ போன் கையடக்கத் தொலைபேசி வரிசையின் அடுத்த வெளியீடாகும். 

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் குறிப்பாக புதிய தோற்றத்துடன் முன்னரை விட பெரிய திரையைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையில் ஐ போன் 4 வின் தோற்றத்தினையே ஐ போன் 4 எஸ் கொண்டுள்ளது. 

எனினும் அப்பிளின் புதிய ஐ. ஓ .எஸ் 5 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. 

மேலும் 200 இற்கும் அதிகமான புது வசதிகளை இது கொண்டதாக அப்பிள் குறிப்பிடுகின்றது. 

அதில் குறிப்பிடக்கூடியவையாக 

1.டுவல் கோர் எ 5 சிப் ( ஐ பேட் 2) முன்னையவற்றை விட இருமடங்கு வேகமான செயற்பாடு மற்றும் 7 மடங்கு வேகமான கிரப்பிக்ஸ். 

2. 8 மெகா பிக்ஸல் கெமரா, 1080 HD வீடியோ பதிவு செய்யக்கூடியது. 

3. சைரி (siri) எனப்படும் எங்களது குரலை புரிந்து கொண்டு அதற்கேற்ப அழைப்புகளை மேற்கொள்ளும்,குறுந்தகவல்களை அனுப்ப, மற்றைய தகவல்களை வழங்கும் வசதி. 

இவற்றில் அப்பிள் பெரிதும் நம்பியிருப்பது சைரி (siri) எனப்படும் வசதியினையே ஆகும். இத்தகைய வசதி ஏற்கனவே அண்ட்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள போதிலும் அப்பிள் இத்தொழிநுட்பத்தை நன்கு மேம்படுத்தியுள்ளது. 

அதாவது நமக்கு தேவையான விடயங்களை ஞாபகப்படுத்தும், கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வசதியுள்ளது. 

பலவசதிகள் பற்றி அப்பிள் கூறிய போதிலும் அதன் தோற்றம் கொள்வனவாளர்களைப் பெரிதும் ஈர்க்கவில்லையென்றே தோன்றுகின்றது. 

மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையானது முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் புதிய உற்பத்தி மீது நாட்டம் கொள்ளவில்லையென்பதனைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கு மேலும் எதிர்பார்க்கப்பட்ட விடயம் என்னவெனில் ஐ போன் 4 எஸ் இனை அறிமுகப்படுத்திய நபராவார். ஆம் ஸ்டீவ் ஜொப்ஸ் வெளியேறியதன் பின்னர் அப்பதவியை பெற்ற டிம் குக் ஐ போன் 4 எஸ் இனை இம்முறை அறிமுகப்படுத்தினார்.

பொதுவாக ஸ்டீவ் ஜொப்ஸ் அறிமுகப்படுத்தியபோது அப்பிளின் உற்பத்திகளுக்கு அதற்கென தனி எதிர்பார்ப்பு மற்றும் தனியானதொரு கவர்ச்சி காணப்பட்டது. அதற்கு அவரது சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் பேச்சுத் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவாற்றல் என்பவையே காரணமாயின. 

எனினும் இம்முறை டிம்குக் மற்றும் அவருடன் இணைந்து ஐ போனை அறிமுகப்படுத்திய அப்பிள் உற்பத்திகளின் உலகளாவிய சந்தைப்படுத்தலுக்கான சிரேஸ்ட உபதலைவர் பிலிப் ஸ்கிலர் ஆகியோர் அந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தினரா என்பது சந்தேகமே. 

அண்ட்ரோயிட் இயங்குதளத்தின் ஆதிக்கம் சந்தையில் அதிகரித்துவரும் நிலையில் அப்பிள் இத்தகைய உற்பத்தியொன்றினை வெளியிட்டுள்ளது. 

எது எவ்வாறெனினும் பொருளொன்றின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பது நுகர்வோரே. எனவே அப்பிள் ஐ போன் 4 எஸ் வரவேற்பைப் பெறுகின்றதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 


மீண்டும் சந்திப்போம்....

0 comments:

Post a Comment